
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலிருந்து தனித்து நிற்கும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில வாரங்களாகவே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ‘மூன்றாவது அணி’ அமைப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த யூகங்கள் நிலவி வந்தன. குறிப்பாக, தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தவெக உடனான கூட்டணி குறித்த செய்திகளை மறுத்துள்ளார். “எங்களுடைய இலக்கு அதிமுகவை மீட்பதுதான். கட்சியின் உண்மையான தொண்டர்கள் மற்றும் தொண்டர் உரிமைக் மீட்புக் குழுவின் பலத்தை நிரூபிப்பதே எங்களின் தற்போதைய பணி,” என்று அவர் கூறினார்.
அதிமுக மீண்டும் பலமான இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். அதிமுக பிரிந்து இருக்கிறதா, ஒன்றிணைந்து இருக்கிறதா என்பது மக்களுக்கு தெரியும். டிடிவி தினகரன் நட்பின் அடையாளமாக எங்களை கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். டிடிவி தினகரன் மற்றும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனைதான் நானும் சொல்கிறேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக கொண்டு சென்ற மாவட்டம் தேனி. அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கவே நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். அந்தப் போராட்டத்தில் இருந்து மாறுபட வேண்டுமென்றால், பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தலையாய கோரிக்கை, என்று கூறி உள்ளார்.
இதில் நீங்கள் தவெக கூட்டணிக்கு செல்ல இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு மட்டும் ஓ பன்னீர்செல்வம் எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? என்று ஓ பன்னீர்செல்வம் கிண்டலாக குறிப்பிட்டார். டிடிவி தினகரன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேஜ கூட்டணியில் இணைந்த பிறகு, ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார்.


