ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டப்பேரவை அமையட்டும்..! – முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கம்..!

ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டப்பேரவை செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்குத் தவெக சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், துணைத் தலைவர் பதவிக்குத் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் இருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் ஜே.சி.டி.பிரபாகரை அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பேரவைத் தலைவரை வாழ்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டப்பேரவை செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

தவெக உறுப்பினர்கள் அனைவரும் பேரவைத் தலைவருக்கு உதவியாகச் செயல்படுவார்கள் என்றும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *