தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு: மேலாண்மை ஆணையம் உறுதி!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பான சிக்கல்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனை முறைப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதனுடன் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற மற்றொரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் அதன் தலைவர் வினீத்குப்தா தலைமையில் இன்று கூடியது.

காவிரியிலிருந்து ஆகஸ்டு மாதத்தில் திறந்து விடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்கான இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு சார்பில், கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் இன்று பிற்பகலில் கூடியது. அதன்படி, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவை ஆணையம் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *