தில்லிக்கு வந்துள்ள நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவுடன் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார்.
நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த அவரைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் நேபாளப் பிரதமருக்குப் படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதைக்குப் பின் இருநாட்டுத் தலைவர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் குழுவினரை அறிமுகப்படுத்தினர். நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தில்லி ஐதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவும் சந்தித்தனர். அதன்பின் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர். இருநாட்டுப் பிரதமர்களும் தங்கள் குழுவினருடன் அமர்ந்து பேச்சு நடத்தினர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்தனர்.



