ராமாயணா திரைப்படத்திற்காக சுமார் 12 படங்களைத் தவிர்த்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான், ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார். இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘ராமாயணா’ படத்தின் இசைக்காக மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். ஒரு சில இசை மெட்டுகளை இறுதி செய்வதற்கு முன்பாகவே 12-க்கும் மேற்பட்ட வடிவங்களை உருவாக்கியதாகவும் கூறினார்.
மேலும், இப்படத்தின் இசைப் பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக, பல முன்னணி இயக்குநர்களின் படங்கள் உள்ளிட்ட சுமார் 12 திரைப்படங்களின் வாய்ப்புகளைத் தவிர்த்ததாகவும், இந்த முடிவு தனக்குப் பெருமை அளிப்பதாகவும் தெரிவித்தார். தனது கலைத்திறனை மேம்படுத்தும், ஆக்கப்பூர்வமான பணிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசை மரபுகளையும் நவீன இசையையும் இணைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் மனம் திறந்து பேசினார்.

