
இட்லி, தோசைக்கு சைடிஷ் என்றால் எப்போதும் முதலில் நினைவிற்கு வருவது சட்னிதான். சட்னியிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னிகளைத்தான் நாம் அரைப்போம்.
இது காலப்போக்கில் சலிப்பை ஏற்படுத்தும். வழக்கமான தேங்காய், தக்காளி சட்னிக்குப் பதிலாகப் புதிய சட்னிகளை முயற்சிக்க விரும்புபவர்கள் காய்கறிகளில் சட்னி அரைக்க முயற்சிக்கலாம்.
காய்கறி சட்னி என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது கத்திரிக்காய் சட்னி. அதிலும் ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காயை சட்னி அரைக்கும்போது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துக்கும் அது அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்:
- நறுக்கிய கத்திரிக்காய் – 4
- பச்சை மிளகாய் – 4
- நறுக்கிய தக்காளி – 1
- சீரகம் – அரை ஸ்பூன்
- எலுமிச்சைசாறு – 1 ஸ்பூன்
- பூண்டு பல் – 2
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
தாளிக்க:
- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- வர மிளகாய் – 1
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீர் ஊற்றி, அதில் ¼ டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
- கத்திரிக்காயை அதில் கழுவி விட்டு, சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய கத்திரிக்காயை தண்ணீரிலேயே போட்டு வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- இதைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, உப்பு தூவி, 2 முதல் 3 நிமிடங்கள்வரை வதக்கவும்.
- கத்திரிக்காய் மென்மையாகும் வரை வதக்கி விட்டுப் பின்னர் ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாகி, நன்கு குலையும் வரை வதக்கவும்.
- பின்னர் சீரகத்தைச் சேர்த்து வதக்கவும்.
- இவை அனைத்தும் நன்கு ஆறும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் இதில் வதக்கிய பச்சை மிளகாயை சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதில் எலுமிச்சைச்சாறையும் சேர்க்கவும்.
- கரடுமுரடாக அரைத்துப் போதுமான அளவு உப்பு சேர்த்து சுவையைச் சரிபார்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டுப் பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் சீரகம், சிவப்பு மிளகாய் மற்றும் உளுந்தம்பருப்பு சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும், அதில் ஒரு ஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும்.
- இப்போது இதை அனைத்தையும் சட்னி மீது ஊற்றிக் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.
சூப்பரான கத்திரிக்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
