
திருச்சி சிறுகனூர் வனப்பகுதியில் ரவுடி கலைப்புலி ராஜாவைப் போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வஉசி நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் ஆதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைபுலி ராஜா(27). இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜா மற்றும் நவீன் குமார் இருவர்களின் நண்பருக்குப் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்றைய தினத்தில் இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக நவீன் குமாரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளனர்.இதில் நவீன்குமார், ராஜா மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்து விட்டுத் தலைமறைவான குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். இந்நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே கலைபுலி ராஜா சுற்றித் திரிவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

