Advertisements

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை (ED) தொடர்ந்துள்ள வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கைஅடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2023-ல் அவரது இல்லத்தில் அதிரடி ரெய்டு நடத்தி, இரவோடு இரவாகக் கைது செய்தது. இதனால் அமைச்சர் பதவியை இழந்த அவர், சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பொது ஊழியராக இருந்த ஒருவரை விசாரித்துத் தண்டிக்க மாநில அரசின் அனுமதி அவசியம் என்ற உச்சநீதிமன்ற விதியின்படி, அமலாக்கத் துறை தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. அவர் திமுகவில் இருந்ததால் முந்தைய ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த அனுமதியை வழங்காமல் தாமதப்படுத்தி வந்தது.
தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஒப்புதலோடு தமிழக அரசு இந்தக் கோப்பினை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது.தற்போது ஆளுநரும் இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை அனல் பறக்கத் தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால், இந்த அனுமதியின் காரணமாக உடனடியாக அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றாலும், நீதிமன்ற விசாரணை தீவிரமடைந்து அவர் மீதான பிடி இறுகுவது கன்பார்ம் என்பதால் தமிழக அரசியலில் இந்த விவகாரம் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
Advertisements




