
திருச்சி:
திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.
இந்தப் பஸ் விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியெனப் பல்வேறு ஊர்களுக்கும் தினமும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் விடுமுறை மற்றும் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதனால், சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை காண முடிகிறது. சென்னையிலிருந்து செல்லும் ஆம்னி பஸ்கள் சிறிய கிராமங்கள் வழியாகவும் செல்கின்றன.
இதனால், வெளியூர்களிலிருந்து செல்லும் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு அதிகாலையில் சென்றுவிடலாம் என்பதால் தனியார் ஆம்னி பஸ்களை அதிகம் விரும்புவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் தான் நேற்று சென்னையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ் நள்ளிரவு திருச்சி அருகே மணப்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தது.
திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ் கவிழ்ந்த வேகத்தில் தீப்பிடித்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் உயிருக்கு அஞ்சி அலறினர்.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியே குடித்தனர். எனினும், பயணிகள் 15 பேருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நள்ளிரவு நேரத்திலும் துரிதமாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பஸ்சின் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது அதிவேகத்தில் பஸ்சை இயக்கினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட இந்தப் பயங்கர விபத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படது.
