தந்தையை வெட்டி கொன்ற பி.டி ஆசிரியர் கைது!
கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தசரதன் (55), விவசாயி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அஸ்வத் குமார் (30), பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவருக்கும் கயத்தாறு அருகே கீழ கூட்டுப்பண்ணையை சேர்ந்த ஸ்ரீமன் நாராயணசாமி (50) என்பவரது மகள் அருணாவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2வது குழந்தை பிறந்து 3 மாதமே ஆவதால் அருணா தந்தை வீட்டில் இருந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பேசாமல் இருந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகளை பார்க்க மனைவி வீட்டுக்கு அஸ்வத்குமார் சென்றுள்ளார். அப்போது குழந்தைகளை பார்க்க விடவில்லையாம். வீடு திரும்பிய அஸ்வத் குமார், நேற்று முன்தினம் தந்தையிடம் இதுபற்றி பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று காலை மீண்டும் அஸ்வத் குமார் கோபத்துடன் மனைவி வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். இதுபற்றி தசரதன், மருமகளுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இதனால் அருணா குடும்பத்தினர், வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு உள்ளே இருந்தனர். அங்கு சென்ற அஸ்வத் குமார் அரிவாளால் கதவுகளை சரமாரியாக வெட்டி கூச்சலிட்டுள்ளார். அங்கு வந்த தசரதன் மகனை தடுத்து வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த அஸ்வத் குமார், அரிவாளால் தசரதனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் உயிரிழந்தார். கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து அஸ்வத் குமாரை கைது செய்தனர்.