ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும் – கேபி முனுசாமி தாக்கு.!

Advertisements

அதிமுகவின் உண்மைத் தொண்டர்களை ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாக பேசக்கூடாது என்றும் அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

அதிமுக குறித்து பேசுவதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கேபி முனுசாமி கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று 3ஆம் இடம் பிடித்தது. தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவில் உட்கட்சி பூசலும், அதிருப்தியும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் த.வெ.கவில் இணைந்தனர்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஆனந்தன், என்.ஆர்.சிவபதி ஆகியோரும், அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும், முக்கிய நிர்வாகிகளும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வின்போது பேசிய அமைச்சரும் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, “ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் த.வெ.கவுடன் உள்ளனர். அ.தி.மு.க.வினர் ஆதரித்ததால்தான் த.வெ.க தேர்தலில் வென்றது. அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். அவர் தேர்தலுக்கு பிறகு தி.மு.க உடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றார்.

தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்ற எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.கவினர் எப்படி ஏற்பார்கள்? தி.மு.க.வும், அ.தி.மு.கவும் இணைந்து யானை பேரம் நடத்தினர். அ.தி.மு.க நிர்வாகிகள் 90 சதவீதம் த.வெ.க.விற்கு வருவார்கள். கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்” என்று பேசினார்.

இந்த நிலையில், அதிமுகவின் உண்மையான தொண்டர்களை ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “பதவி சுகம் அனுபவித்தவர்கள் த.வெ.கவில் இணைந்திருக்கின்றனர். அப்படி இணையும்போது ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து தான்தோன்றிதனமாக கருத்துக்களை பதிய வைத்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எதையும் பேசக் கூடாது. அவருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை. அவரைப் போல் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுக்கு மாறியவர் இல்லை.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடுகிறார். திமுகவிற்கு சென்றார் அங்கு வாய்ப்பில்லை. அதேபோல விசிகவிற்கு சென்றார் அங்கும் வாய்ப்பில்லை. பிறகு அதிமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை. இறுதியாக த.வெ.கவிற்கு சென்றார். தேர்தல் வந்தது, வாய்ப்பு கிடைத்தது அமைச்சர் ஆனார். அதோடு அவர் நின்றுவிட வேண்டும்.

மற்ற கட்சிகளுடைய வரலாற்றையோ, வளர்ச்சியையோ மதிப்பிடாமல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாக பேசக்கூடாது. அ.தி.மு.கவின் உண்மையான தொண்டர்களை ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார். அவருக்கு நாவடக்கம் வேண்டும். அ.தி.மு.க குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *