
உலக நீரிழிவு தினம்..!
இன்று உலகம் முழுவதும் பரவலாக ,வயது வித்தியாசமின்றி நீரிழிவு என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இது குறித்து ஒரு சிறிய பார்வை:
உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சை, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டைப்1 நீரிழிவு நோயைத் தடுக்க முடியாது மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இன்சுலின் ஊசி மூலம் இந்த வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம், சிகிச்சையின் மூலம் இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும்.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு நாளாக நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐ.நா. சபை, நீல நிறத்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் பெருமளவில் வரவேற்பை பெற்றது. நீரிழிவு நோயாளிகளின் உடல் மற்றும் மன நலன்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதல் நோக்கம்.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு உடலால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை உடல் செல்களுக்கு அனுப்ப முடிவதில்லை என்பதையே காட்டுகிறது. இந்நிலை கண்டு கொள்ளப்படாமல் விடப்படும்போது அது நீரிழிவு நோயாக மாறுகிறது. இந்த டெக்னாலஜி யுகத்தில் உடற்பயிற்சிகள் இல்லாதது நீரிழிவு நோய்க்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. இயற்கை முறையில், மருந்துகள் இல்லாமலேயே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க முடியும்.
ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும்.
அதிகளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க கூடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. ஆரோக்கியமான உடல் எடை, நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது.
நார்ச்சத்து உணவுகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் சர்க்கரை செரிமானத்தையும் சர்க்கரையை உறிஞ்சுவதையும் மெதுவாக்குகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மன அழுத்தம் உடலில், குளுகோகான் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே வழக்கமான உடல் பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் டிஹைட்ரேட் ஏற்படாமல் (நீரிழப்பு) தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது.
எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம் கார்டிசோலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
உணவின் மூலமே இந்நோய் வருகிறது. உணவின் மூலமே இந் நோய் குணப்படுத்த முடியும்.. மேலே கூறியவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு வராமல் தடுக்கலாம்.


