
நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யும் வீரர்களின் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு Vijay Diwas கொண்டாடப்படுகிறது. வெற்றி நாள் என்பது இதன் பொருளாகும்.
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாகவே விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது.வரலாற்று சிறப்பு மிக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய வீரர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் விளைவாகத்தான் வங்கதேசம் எனும் தேசம் உருவாக இந்திய ராணுவம் காரணமாகஅமைந்தது.
இதே நாளில் வங்கதேசத்தில் பிஜோய் திவாஸ் என்ற பெயரில், ராணுவ வீரர்களின் துணிச்சல், வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.
விஜய் திவாஸ் வரலாறு:
கடந்த 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் செங்கிஸ்கான் எனும் ஆபரேஷனை செயல்படுத்தி இந்தியாவின் 11 ஏர் ஸ்டேஷன்கள் மீது தாக்குதல் நடத்தியது. 13 நாட்கள் நடந்த இந்த போரில் இந்திய ராணுவத்தின் வீரத்தையும்,துணிச்சலையும், தீரத்தையும் எதிர்கொள்ள முடியாமல் டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது.
ஏறக்குறைய 93 ஆயிரம் படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் அமிர் அப்துல்லா கான் நைஜி, இந்திய ராணுவத்திடமும், வங்கதேசத்தின் முக்கி வாகினினியிடம் சரணடைந்தமைக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். உலகளவிலும், ஆசியப் பிராந்தியத்திலும் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்க இந்த போர் வெற்றி முக்கியமானதாக அமைந்தது.
இந்த போரில் இந்தியா சார்பில் 3900 ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், 9,851 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவூட்டும் விதத்தில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது
முக்கியத்துவம் என்ன?
இந்தியாவின் மக்களையும், தேசத்தையும் காக்க ராணுவத்தின் போராட்டமும், போர் புரிந்த வீரச் செயலும் போற்றுதற்குரியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பெற்ற வெற்றியும், அதனால் வங்கதேசம் எனும் தேசம் உருவானதையும் கொண்டாடும் வகையில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
வீரர்களை போற்றுவதில் முக்கிய முனைப்போடு செயல்படுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


