
மும்பை: ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரபல தொழிலதிபரும் ஜீத்தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் புனித் கோயங்கா, ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இதற்கான அனுமதியை பெற்று படம் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா தனது 86வது வயதில் கடந்த புதன் இரவு காலமானார். அவரது மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பையில் நேற்றைய தினம் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாகப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் தலைவர் புனித் கோயங்கா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அந்தத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்க உள்ளதாகப் புனித் கோயங்கா முன்மொழிந்துள்ளார்.. அந்த மாபெரும் மனிதருக்கு மரியாதை செலுத்தவும், அவர் சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்திற்காகவும். ரத்தன் டாடா குறித்த படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். டாடாவின் மகத்தான பணிகுறித்து உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கோயங்கா நம்புகிறார். அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
உரிய அனுமதி கிடைத்தவுடன் ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜீ ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்று ஜீச்சேர்மேன் கோபாலன் அறிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் உத்வேகம் கொள்ளவும் இது படம் உதவும் என்ரும் அவர் தெரிவித்தார். இருப்பினும், ஒருவரது வாழ்க்கை வரலாற்றை அதிகாரப்பூர்வமாக எடுக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் தேவைப்படும்.
டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று ரத்தன் டாடாவின் வாழ்க்கை படமாக்கப்படும் என்றும் கோபாலன் கூறினார். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தும் சமூக சேவைக்கும் ஏழைகளுக்கு உதவவும் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் இதைச் சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்ல உதவி விஐயான் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவு்ம திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 190 நாடுகளுக்குப் படத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 86 வயதான ரத்தன் டாடாவுக்கு கடந்த திங்கள்கிழமை அதிகாலை திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் ரத்த அழுத்தம் நள்ளிரவில் குறைந்ததை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐசியுவில் சிறப்பு வல்லுநர் குழு அவருக்குச் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது.
இதற்கிடையே சிகிச்சை பலன் இல்லாமல் அவர் கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார். நேற்று வியாழக்கிழமை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்திய தொழிற்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை எடுத்து வந்தவர் ரத்தன் டாடா.. மேலும், டாடா குழுமத்தைச் சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனமாக எடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. கடந்த 2000ம் ஆண்டு இவருக்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், 2008இல் நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போது எழுந்துள்ளது.


