Advertisements

தமிழகத்தில் நாளை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார்.
வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10 ஆயிரத்து 545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4 ஆயிரத்து 624 நுண் பார்வையாளர்கள் அமைக்கப்ட்டுள்ளனர் என்றார். அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும் என்றும் காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நாளை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார்.
Advertisements



