Advertisements

மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் பழமையான டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைவதே காரணம் என்று மின்வாரியத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில், மின்வாரியத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல் மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் மின்சார வாரியத்தில் 15 ஆயிரம் புதிய பணியாளர்கள் அரசுப் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு என்பது கிடையாது. சென்னையில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் பழமையான டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைவதே காரணம் என்று கூறினார். தொடர்ந்து, ஒரு சில பகுதிகளில் திட்டமிட்டே மின்சாரப் பெட்டிகளில் உள்ள ‘பியூஸ்’ பிடுங்கப்பட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுவது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Advertisements


