
கடந்த ஓராண்டாக போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல்துறையினருக்கு முதலமைச்சர் விஜய் ஏன் விருது வழங்கினார் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியபோது, கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை என்று கூறினார். கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகமாகியுள்ளது என்றும் இது காவல்துறை கொடுத்த அறிக்கை என்றும் சுட்டி காட்டினார்.
தி.மு.க. ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்தது என்று கூறினார். திமுகவை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,. நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல்,
உங்கள் ஆட்சியில் இது நடந்தது, அது நடந்தது என்று குறைக்கூறுவதாகத் தெரிவத்தார். கடந்த ஓராண்டாக போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல்துறையினருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கியுள்ளதாகவும் போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன் விருது வழங்கினீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியபோது, கோவையில் அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்தார்.




