Advertisements

தமிழ்நாட்டில் அரசு ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பதற்குப் பதிலாக ஏமாற்றத்தையுமே இந்த அரசு விதைத்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் நலனுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாகச் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் போதைப்பொருள் கலாச்சாரம் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பயிர்க்கடன் முழுமையான தள்ளுபடி மற்றும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் அரைகுறையாகவும் ஏமாற்றுவதாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், காவிரி நதிநீர் மற்றும் குறுவை சாகுபடி விவகாரங்களில் அரசு மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்படுவது போன்ற நிர்வாகக் குளறுபடிகள் தினந்தோறும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச் செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் தனது அறையை மாற்றுவதிலும், ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகத்திலுமே ஆர்வம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த 100 நாள் ஆட்சியில் நிர்வாகக் குழப்பமும் விளம்பர மோகமுமே அடையாளங்களாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இனியாவது மக்கள் பயனடைவதற்கான ஆக்கப்பூர்வமான பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisements


