
சென்னை: அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது ஆளுநருடைய விருப்பமாக உள்ளது. அவர் பகிரங்கமாக பல தருணங்களில் துணைவேந்தர்கள் கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இருக்கிறார். எழுத்துபூர்வமான அறிக்கைகளிலும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நேற்று தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களோடு ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களோடு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில், வரக்கூடிய 26ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆளுநர் விவாதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேசிய தரவரிசையில் முன்னணி இடங்களை பெற்ற தமிழக உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் அழைத்துள்ளார்.
உயர்கல்வித்துறையில் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று 26ம் தேதி நடைபெறும் கூட்டத்திலும் ஆளுநர் வலியுறுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, அமைச்சரும், ஆளுநரும் மாறி மாறி துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதால் உயர்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

