யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன..உண்மையான பக்தி இல்லை! ஐகோர்ட் நீதிபதி வேதனை..!!

Advertisements

சென்னை: கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருக்கக்கூடிய ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தினுடைய ஆடி திருவிழா ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடத்தவுள்ளதாகவும், இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கோவிலின் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் கோவில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனை உள்ளதால் தாசில்தார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனை ஏற்படுவது தொடர்பாக தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருகிறது என வேதனை தெரிவித்தார். அமைதிக்காக மக்கள் கோயிலுக்கு வழிபாடு நடத்தச் செல்லும் நிலையில் விழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிர்ஷ்டவசமானது.

யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது; அதற்கு பதில் கோயில்களை மூடிவிடலாம் என்று வேதனை தெரிவித்தார். கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார். எனவே இதுபோன்ற பிரச்சனைக்காக காவல்துறையினர், வருவாய்த்துறையினர் நேரம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் வசம் விட்டுவிடுவதாகவும், ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோவில் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *