
ஆயுத பூஜை :
இன்று அதிகாலை முதலே கோயம்பேடு மார்கெட்டில் குவிந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்லக் குவிந்தனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.ஆண்டுதோறும் கோயம்பேடு பூ மார்கெட் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடத்தி சிறப்புச் சந்தைக்கு அனுமதி கொடுக்கப்படுவது வழக்கம். மெட்ரோ ரெயில் பணி, ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டுச் சிறப்புச் சந்தை நடத்த ஏலம் நடத்தப்படவில்லை.

இதையடுத்து சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பூஜை பொருட்களை வாங்கி சென்றிட வசதியாக மளிகை மார்கெட் வளாகத்தில் கடந்த 18-ந்தேதி அங்காடி நிர்வாகக் குழு சார்பில் சிறப்புச் சந்தை தொடங்கப்பட்டது.இந்தச் சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் அவல், பொரி, கடலை, பூசணிக்காய், தேங்காய், வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.


