
திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்:திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாகத் தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசுமீது குற்றச்சாட்டையும் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவர், கடந்த 19ம் தேதி திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததான வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது புகாரைத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்தப் புகார்குறித்து விசாரிக்கத் திருப்பதி தேவஸ்தான குழு கொல்லகூடேம் கிராமத்திற்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


