
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்தியதாகக் கூறப்படும் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் அரசு நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்வது அரசின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு தரமான மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குடிநீரின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் உயிர் மற்றும் உடல்நலத்துடன் எந்தவித அலட்சியமும் இருக்கக்கூடாது என்றும், பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.




