Tiruchendur Paneer Ilai Vibuthi: தீராத நோய்களையும் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி மகத்துவம் என்ன?

இறைவழிபாட்டில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது விபூதி.. விபூதி என்றாலே மிகச்சிறப்பு. அதிலும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் விபூதியானது அருமருந்தாக விளங்குகிறது.

பன்னீர் இலை விபூதி:

பன்னீர் இலையில் வழங்கப்படும் விபூதியானது தீராத நோய்களையும் தீர்க்கும் என நம்பப்படுகிறது.
இந்தப் பன்னீர் இலை விபூதியானது திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும். முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில் சிறப்புமிக்க பன்னீர் இலை விபூதி இன்றளவும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் மகிமை:

இக்கோவிலில் பன்னீர் மரங்களாக, முருகப்பெருமானை வழிபட்ட தேவர்கள் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே இம்மரங்களிலிருந்து பெறப்படும் பன்னீர் இலைகளும் மகத்துவம் பெற்றதாய் இருக்கின்றன.

முருகனின் ஒரு பக்கத்திற்கு ஆறு கரங்கள் என இருபக்கங்களையும் சேர்த்து பன்னிரு கரங்களைப் போலவே, பன்னீர் மரத்தின் இலைகளும் பன்னிரு நரம்புகளைக் கொண்டுள்ளன.இந்தப் பன்னீர் இலைகளால் வழங்கப்படும் விபூதியானது, முருகப்பெருமான் தன் பன்னிரு கரங்களாலேயே வழங்குவதாக நம்பப்படுகிறது.

இந்தப் பன்னீர் இலை விபூதியில் வேத மந்திர சக்திகள் நிறைந்துள்ளது என்பது ஐதீகம்.சுவாமி ஆதிசங்கரர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டபொழுது திருச்செந்தூர் வந்து, பன்னீர் இலை விபூதியை பெற்று குணமடைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இறைவனுடைய பூஜைக்குரியதான இந்தப் பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் பத்திரமாகத் தங்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று, துன்பங்கள் வரும் நேரத்தில் முருகப்பெருமானை வேண்டிப் பூஜித்து, அணிந்து கொள்கிறார்கள்.

இந்தப் பன்னீர் இலை விபூதியை அணிவதால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்திலிருந்தும் முருகப்பெருமான் நம்மைக் காத்தருள்வார் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *