காலங்காலமாக இருந்த உரிமை தடுப்பதா? சீறிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!

Advertisements

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாச மண்டபத்தில், காணிக்கை செலுத்துவதற்கும் உள்ளூர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த வாய்ப்பு தடுக்கப்படுகிற இரும்பு கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும்” என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் இந்து அறநிலையத்துறைக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். நமது தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து சுவாமி தரிசனத்திற்கு வருகின்ற நிலை பன்னெடும் காலமாக இருந்து வருகிறது.

தென் மாவட்டங்கள் முழுவதுமுள்ள விவசாய பெருமக்கள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விவசாய விளை பொருட்களை முருகப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்யும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் மற்றும் இதர விளை பொருட்களை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி கடவுளை வழிபடுகின்றனர்..மேலும் ஏராளமான திருமணங்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்புதான் நடைபெறுகிறது.

இப்படியாக முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் இரும்பு கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் கடவுளான முருகப்பெருமானை விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும் உள்ளூர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த வாய்ப்பு தடுக்கப்படுகிற இந்த இரும்பு கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.உள்துறை அருகில் உள்ள கேட்டை பலப்படுத்த வேண்டும்.

அதேபோல் உள்ளூர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். பக்தர்களின் இக்கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் பக்தர்களின் கோரிக்கைக்காக அவர்களுடன் இணைந்து எனது தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *