
கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ கன்னட படம் வெளியாகி அம்மாநில மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில், சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பயனாக ரூ.16 கோடியில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது.
இந்த வரவேற்பின் காரணமாக படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.இந்தப் படத்திலும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளார். ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் அக்.1 திரையரங்குகளில் வெளியானது.
இதற்கிடையே, தமிழில் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ஆயுத பூஜைக்கு வெளியான திரைப்படம் ‘இட்லி கடை’. ‘பவர் பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் முதல் நாளில் ரூ.15 கோடி வசூலை எட்டிய நிலையில், வெளியான ஐந்து நாளில் இந்திய அளவில் ரூ.38 கோடியைத் தாண்டி வசூலித்திருப்பதாக சைனிக் வலைதளம் தெரிவித்துள்ளது.
விரைவில் ரூ.50 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


