அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாக்கள் குறித்து திருமாவளவன் கருத்து.!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இவர்களும் விரைவில் தவெகவில் இணையலாம் என தகவல் சொல்லப்படுகிறது.இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் இது தொடர்பாகவும், வேறு பல விவரங்கள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர், “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல.

என்ன பின்னணியில் அவர்கள் இதனை செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதேசமயம், இதனை அதிமுகவின் உட்கட்சி விவகாரமாகவும் கடந்து செல்லமுடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தந்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை முதல்நாள் சந்திப்பிலேயே தெரிவித்துவிட்டேன்.

அமைச்சரவை இலாகாவை மாற்றித் தரவேண்டும், திருச்சி கிழக்கில் போட்டி என எந்த அழுத்தத்தையும் நாங்கள் தவெகவுக்கு கொடுக்கவில்லை. இவை அனைத்தும், ஊடகங்களின் ஊகங்கள் மட்டுமே” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *