
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி (Strait of Hormuz), தற்போது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகை நடவடிக்கைகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவித்தார். ஹார்மூஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் திறந்து விடப்பட்டே இருப்பதாகவும், ஆனால் அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் ஈரானியக் கடற்படையுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் போக்குவரத்துச் சிக்கல்களுக்கு ஈரான் காரணமல்ல என்றும், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தடையை நீக்கினால் மட்டுமே தற்போதைய பதற்றமான சூழல் முடிவுக்கு வரும் என்றும் அவர் தனது பேட்டியின் போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



