
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே 2157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நால்வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை – புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்டதாக உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், புதுச்சேரி இடையிலான 46 கிலோமீட்டர் தொலைவுக்கு நால்வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு 2157 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் சென்னை, புதுச்சேரி விமான நிலையங்களும், புதுச்சேரி, சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையங்களும், கடலூர்த் துறைமுகமும் பெரிதும் பயனடையும் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் இப்பகுதிகளின் போக்குவரத்துத் தொடர்பும் வணிகமும் மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


