
சென்னை:
“சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களிலேயே மிகவும் மகிழ்ச்சியளிக்கும் பட்ஜெட் இது. பட்ஜெட் வாசித்து முடிப்பதற்குள்ளேயே மக்களால் கொண்டாடப்படுகிறது” எனத் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம்வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லையெனப் பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்திருக்கும் 8-வது பட்ஜெட் இது.
ஆண்டுக்கு ரூ.12 லட்சம்வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதாவது, மாதம் ரூ. 1 லட்சம்வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூபாய் 12 லட்சம் வரை வரி விலக்கு:
வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுக்கப்படுகிறது. வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.
கூடுதலாக ரூ. 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ 2,600 கோடியும் அரசுக்கு இழப்பு நேரிடும் என்றும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொண்டாடப்படக்கூடிய பட்ஜெட்:
தனியார் செய்தி தொலைக்காட்சிக்குத் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள பேட்டியில், “இது அனைவரும் கொண்டாடக்கூடிய பட்ஜெட். நிர்மலா சீதாராமன் 8வது முறையாகப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதற்கும், அவர் தனது பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டியதற்கும் பெருமை கொள்வோம்.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களிலிலேயே மிக மகிழ்ச்சியளித்த பட்ஜெட் இது. பட்ஜெட் வாசித்து முடிப்பதற்குள்ளேயே மக்களால் கொண்டாடப்படும் பட்ஜெட் என்றால் இதுதான்.
குறிப்பாக 12 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரிக்கு வரி கொண்டாட்டம்
நேற்று முன் தினமே பிரதமர் மோடி சொல்லி இருந்தார். நடுத்தர மக்களுக்கான லட்சுமிகடாட்சமான பட்ஜெட் என்று சொல்லி இருந்தார். உதாரணத்துக்கு மாதம் ரூபாய் 10000 சேமித்து வைத்தால் அவர் ஆண்டு முடிவில் லட்சாதிபதி ஆகிவிடலாம். தனிநபர் வருமானத்திற்கு மிக அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வருமான வரி தாக்கல் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அனைவரையும் வருமான வரி செலுத்த ஊக்குவிக்கிறது. வரிக்கு வரி கொண்டாடப்படக்கூடிய பட்ஜெட்டாக இருக்கிறது இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்” எனத் தெரிவித்துள்ளார்.
