புதுச்சேரி: பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது. தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார். வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்தப்படுகிறது. சிலை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். தமிழ் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.