ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று (ஜூலை 14) காலை 9:30 மணிக்கு மாடவீதிகள் சுற்றி கொடிபட்டம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து ரகு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி, தக்கார் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. மான்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசந்தி, அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து தினமும் காலை 10 மணிக்கு மேல் ஆண்டாள், ரங்க மன்னார் மண்டபம் எழுந்தருளிலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஜூலை 18 காலை 10 மணிக்கு கோயில் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்கல சாசனமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. ஜூலை 20 அன்று இரவு 7 மணிக்கு மேல் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் ரங்கமன்னார் சயனசேவை உற்சவம் நடக்கிறது. ஜூலை 22 காலை 8;05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.