
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமாரை அடித்துக் கொன்றதாகக் காவலர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்கள் ஐவரையும் 15 நாள் காவலில் வைக்கத் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், அங்குக் காரில் வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி, அவர் மகள் நிகிதா ஆகியோருக்கு வழிபாடு செய்வதற்கும் காரை நிறுத்துவதற்கும் உதவி செய்துள்ளார். அப்போது காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனது குறித்துச் சிவகாமியும் அவர் மகள் நிகிதாவும் திருப்புவனம் காவல்நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதியாமலேயே அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவனம் காவலர்கள் நீதிமன்றத்திலும் நிறுத்தாமல், காவல்நிலையத்தில் வைத்து முறையாக விசாரிக்காமல் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசென்றும், வாகனத்தில் அங்குமிங்கு அலைத்தும் அவரை அடித்துக் கொன்றுவிட்டனர். அஜித்தின் தம்பியையும் அவர்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் அஜித்தின் உடற்கூறாய்வு மதுரை இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்றது. காவலர்களின் அட்டூழியத்தால் அஜித்குமார் கொல்லப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விசாரணையின்போது தப்பி ஓட முயன்றபோது வலிப்பு ஏற்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அஜித்குமார் உயிரிழந்ததாகத் திருப்புவனம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும் அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கண்டனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இந்த வழக்கு சி பி சி ஐ டி யிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் நடைபெற்ற உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் அஜித் குமார் உடலில் 9 இடங்களில் தாக்கப்பட்டதாகவும், அவர் தொண்டையில் குரல்வளையில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், உள்ளுறுப்புகள் சேதம் அடைந்து இரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் அறிக்கை வெளியானது.உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து 24 காவல் கொட்டடிச் சாவுகள் நடைபெற்றதைக் கண்டித்தனர்.இதையடுத்துத் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் கள ஆய்வு மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்துச் சென்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக ஐந்து காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர்களைப் பலத்த பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் அழைத்துச் சென்று நீதிபதி வெங்கடேஷ் பிரசாத்திடம் நேரில் நிறுத்தினர். ஐந்து பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் கிடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே ஆறு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



