
தமிழகத்தில் குறிப்பாக , தென் மாவட்டங்களில் அதிகமான வன்முறைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் அரிவாள் வெட்டு வரை சென்றுள்ளது. ஒரு மாணவனை மற்றொரு மாணவன் அரிவாளால் வெட்ட, அதை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவர் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.
பேனா, பென்சில் விவகாரம் ஒரு மாதத்திற்கு முன்னதாக சண்டையிட்டு கொண்டிருந்தார்கள். இதனை அடுத்து வகுப்பாசிரியர் இருவரையும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வகுப்பறையில் அமர வைத்துள்ளார். எனினும் மாணவர்கள் இடையே மோதல் தீரவில்லை.இந்த நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு வந்த ஒரு மாணவன், புத்தகப்பையில் அரிவாளை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். இன்று காலையில் வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை தான் கொண்டு வந்த அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதில் அந்த மாணவனுக்கு கையில் வெட்டு விழுந்துள்ளது. இதனை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது
இந்த சம்பவத்தால் அலறிய மாணவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தினர் அரிவாளுடன் நின்றிருந்த மாணவனை பிடித்து, அவனிடம் இருந்து அரிவாளை பறித்துள்ளனர்.மேலும், காயம் அடைந்த மாணவன் மற்றும் ஆசிரியரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே சிறிய அளவில் ஏற்பட்ட மோதல் தற்போது அரிவாள் வெட்டு வரை சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
