
பெற்றோரை இழந்த மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அன்பின் கரங்கள் திட்டத்தில் 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என இணை ஆணையர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அன்பின் கரங்கள்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி இணை ஆணையர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியபோது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ்-2 வரை பயிலும் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நடப்பாண்டில் தாய், தந்தை இருவரும் இல்லாத 86 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அன்பின் கரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை இந்த கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மேலும், மாணவர்களின் கல்வி பாதியில் தடைபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நிதியானது வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் பாதுகாவலர் அல்லது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அந்தத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



