
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வெளியான அஜித் படங்களில் இப்படம் தான் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
இந்த படத்தில் பல்வேறு இடங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கேட்டும் இளையராஜா தரப்பில் அவருடைய வழக்கறிஞர் சார்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
7 நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அண்மையில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் குணா திரைப்படத்தின் ‘கண்மணி அன்போடு..’ பாடல் இடம் பெற்றிருந்த நிலையில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
