Advertisements

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள கருவறையிலும் தங்கம் திருடு போய் இருப்பது அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது . சுமார் ஐந்து கோடி ரூபாய் அளவில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் ஜெயராம் , மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழில் பிரமுகர் ஒருவர் புதிதாக சிக்குவார்கள் என தெரிகிறது .
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது , இந்த மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் ,
சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலுக்கு சொந்தமான ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை கேரள அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாத பொருளாகி இருக்கிறது . சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர் .
கடந்த 1998 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு யுனைடெட் பிரீவரீஸ் நிறுவனம் மூலம் விஜய் மல்லையா என்ற தொழிலதிபரால் சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது . இந்த தங்கம் கோவிலில் உள்ள ஆபரணங்கள் மற்றும் வேலைபாடு களுக்காக பயன்படுத்தப்பட்டது . அதன்படி துவாரபாலகர்கள் சிலை மீதாக அணிவிக்கப்பட்டு இருந்த கவசங்களிலும் ஒன்றரை கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது .
கடந்த 2019 ஆம் ஆண்டு துவாரபாலகர்கள் சிலை மீதான தங்க கவசத்தை செப்பனிட்டு தருவதாக பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் முன் வந்தார். இந்தப் பணியை சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தை வைத்து செய்து தருவதாக தெரிவித்தார் .
அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் அதிகாரிகள் தங்க கவசத்தை அவரிடம் ஒப்படைத்தள்ளனர் . சில மாதங்கள் கழித்து சீரமைக்கப்பட்ட நகைகள் தேவசம் அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன . இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் தங்கக் கவசத்தை செப்பனிடும் பணிக்காக மீண்டும் அவரிடமே ஒப்படைக்க தேவச வாரியம் முடிவு எடுத்தது .
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சபரிமலை கோவிலின் சிறப்பு ஆணையர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார் . அதில் ஐயப்பன் கோவிலில் உள்ள தங்க கவசம் மற்றும் பீடம் ஆகியவை தனது அனுமதி இல்லாமலேயே சீரமைப்பு பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார் .
சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்திடம் வழங்குவதற்காக சபரிமலை கோவிலில் இருந்து தங்க கவசம் செப்டம்பர் 7ஆம் தேதி தரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் . இது மட்டுமல்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு இதேபோல் செப் பண்ணிட்டு பணிக்காக தங்க கவசம் வழங்கப்பட்ட போது அதன் எடை நாலரை கிலோ வரை குறைந்த இருந்ததாகவும் தெரிவித்தார் .
இதனிடையே கோவில் பதிவேட்டில் தங்க கவசங்கள் ஒப்படைக்கப்பட்ட போது அதில் ஒன்றரை கிலோ தங்கம் இருந்ததை மறைத்து அதனை வெறும் செம்பு தகடு என குறிப்பிட்டுள்ளனர் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது . இந்த சம்பவத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் 25 அரை கிலோ எடையுள்ள 12 செப்பு தகடுகள் மற்றும் துவார பாலகர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ எடையுள்ள இரண்டு பீடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .
அவற்றை ஒப்படைக்கும் பொழுது அதன் ஒட்டுமொத்த எடை 42.4 கிலோவாக இருந்தது . ஆனால் பணிகள் முடிந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பிய போது அதன் எடை 38.2 கிலோ ஆக இருந்ததாக தெரியவந்துள்ளது . தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி அவற்றை சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் முன்பாக பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் முகநூல் பதிவில் ஆபரணங்களுக்கு தங்க முலாம் பூசிய பிறகு பிரபல மலையாள நடிகர் ஜெயராமன் இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர் .
இந்த சர்ச்சையில் நடிகர் ஜெயராமன் சிக்கிக்கொண்ட நிலையில் நான் எந்த தவறும் செய்யவில்லை உண்மை வெளியே வரட்டும் என தெரிவித்துள்ளார் . இது தவிர தேவசம் வாரியத்தின் முன்னாள் தலைவர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பத்மகுமார் மற்றும் வாசு ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .
இதில் திடுக்கிடும் தகவலாக திருவனந்தபுரத்தில் உள்ள உன்னிகிருஷ்ணன் உறவினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துவாரபாலகர் சிலைகளின் பீடங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . இந்த தங்கத் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரிகள் முராரி பாபு சதீஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த நிலையில் சபரிமலை கோவில் கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டதாக தெரிகிறது இது தொடர்பாக உன்னி கிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று மீண்டும் கைது செய்தார்கள் . அவரை பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையில் உள்ள கதவில் உள்ள தங்கம் எங்கே போனது என்பது இப்பொழுது மர்மமாக இருக்கிறது . இதனிடையே திருடப்பட்ட தங்கத்தை வைத்து பல ஏழைப் பெண்களின் திருமணத்தை உன்னிகிருஷ்ணன் போத்தி நடத்தி வைத்ததாகவும் பரபரப்பு தகவல் பேசப்படுகிறது .
இறுதிக்கட்டமாக தற்பொழுது சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தின் தொழில் அதிபரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முன்வந்துள்ளனர் . சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரளா தமிழ்நாடு மட்டுமல்லாமல் தற்பொழுது அகில இந்திய அளவிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது முக்கிய தகவலாகும்.
Advertisements




