
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவதில், மகாத்மா காந்தி பெயரால் இத்தனை ஆண்டு காலம் இயங்கிக் கொண்டு இருந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. அரசு தரம் தாழ்ந்து அரசியல் செய்வதற்கு இத்தகைய சான்று வேறு இல்லை. மிக அற்பமான அரசியல். தேசத்தால் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். தேச பிதா என்று போற்றப்பட கூடியவர். பெயர் மாற்றம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் 24-ம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளும். 23-ம் தேதி இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து போராட்டம் அறிவித்து இருந்தோம். அந்த போராட்டம் 24-ம் தேதி நடக்கும். விஜய் ஒவ்வொரு நிகழ்வும் பேச்சும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாகக் கொண்டு உள்ளது.
நாட்டைப் பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ இருப்பதாகத் தெரியவில்லை. திமுக வெறுப்பை மட்டுமே பரப்புரையை தனது கடமையாகக் கொண்டு செயல்படுகிறார். மக்கள் கவனித்து வருகின்றனர். அவரது திட்டம், நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஜெயலலிதா, எச்.ராஜா ஆகியோர் சொன்னதையே பேசுகிறார். எச்.ராஜாவின் மற்றொரு குரலாகத்தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.


