Advertisements

ஓமலூர் அருகே, பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில், திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. 15வது நாள் விழா நேற்றிரவு நடைபெற்ற நிலையில், பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை மூன்று பேர் கொண்டு சென்றுள்ளனர். உரிய பாதுகாப்பின்றி இருசக்கர வாகனத்தில் இருந்தவாறே பட்டாசுகளை ஒன்றன் பின் ஒன்றாக கொளுத்தி போட்டவாறு சென்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி விழுந்ததில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், இருசக்கர வாகனத்தில் வந்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் , சிறுவர்கள் கார்த்திக் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வாண வேடிக்கை நிகழ்ச்சியை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பலர் படுகாயமடைந்தனர். இதில், படுகாயம் அடைந்த லோகநாதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisements



