Kallakurichi: சொகுசு காரில் கருக்கலைப்பு.. பரபரப்பு பின்னணி!

Advertisements

மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது மனைவி பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.

இங்கு அசகளத்தூரை சேர்ந்த சிவகுரு மனைவி கவுதமி (29) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருந்துக்கடையில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தலைமை மருத்துவர் அகிலன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு மருத்துவக்குழுவுடன் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மருந்துக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு சொந்தமான சொகுசு காரை சோதனை செய்தபோது, அதில் கர்ப்பிணியின் கருவில் வளரும் சிசு ஆணா? அல்லது பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் கருவி இருந்தது. இதையடுத்து போலீசார், மருந்துக்கடையில் இருந்த மணிவண்ணன், கவுதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-மனைவியின் பெயரில் மருந்துக்கடை நடத்தி வரும் மணிவண்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகளை புரோக்கர்கள் மூலம் கண்டறிந்து, அவர்களை காரில் அழைத்து வருவதுடன், ஓடும் காரில் ஸ்கேன் கருவி மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து மருந்துக்கடையில் வைத்து கருக்கலைப்பு செய்ததும், இதற்காக கர்ப்பிணியிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றதும் தெரியவந்தது. இதற்கு கவுதமி உடந்தையாக இருந்ததும், அசகளத்தூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ்(22), குமாரசாமி மகன் கண்ணதாசன்(29) ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் கருவி, சொகுசு கார் மற்றும் மருந்துக்கடையில் இருந்த கருக்கலைப்பு மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *