
சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட் திவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் திருமணமான மூன்று ஆண்டு ஆன தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செங்கப்பன் என்பவரது மூத்த மகன் கோகுல். இவர் மும்பையில் துணை ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் தேவன் (30) சத்தீஸ்கர் மாநிலத்தில் சி ஆர் பி எப்வீரராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று crpf வீரர்கள் உயிரிழந்தனர். அதில் குடியாத்தம் கணவாய் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தேவன் குண்டு வெடிப்பில் பலியானார்.
இதனையடுத்து அவரது உடல் விமானம்மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நாளைச் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.இதனிடையே தேவன் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினருடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது:தேவன் சிறுவயதிலிருந்து ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் படித்துக் கடந்த 2013 ஆம் ஆண்டு சிஆர்பிஎப் படையில் வீரராகப் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்றதாகவும்,
அங்கு நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவருக்குத் திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ள நிலையில் திருமணம் ஆன 3 ஆண்டுகளில் தேவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது பெருமையாக நினைப்பதாகவும் மேலும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.


