Mining Robbery: கண்டுகொள்ளாத காவல்துறை!

Advertisements

திருப்பூர் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுரங்கப் பாதைகள் அமைத்து லட்சக்கணக்கான லோடு கிராவல் மண் கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், அதிகாரிகள் ஆசியோடு நடைபெறும் மண் திருட்டை தடுத்து மண் மாஃபியாகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அனுப்பட்டி, புளியம்பட்டி, ஜேக்கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமப் பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் எவ்வித பயிர் சாகுபடியுமின்றி முட்கள் முளைத்துப் புதர் மண்டி காட்சியளிக்கின்றன.இதனைப் பயன்படுத்திக் கொண்ட மண் மாஃபியா கும்பலொன்று பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள், ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் திருட்டில் இரவு பகலாகச் சுரங்கப்பாதைகள் அமைத்து ஈடுபட்டு வருவதாகப் புகார் எழுத்துள்ளது.

சுமார் 50 அடி ஆழத்தில் பல்லாயிரக்கணக்கானலோடு கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தக் கும்பல் பெருமளவு கிராவல் மண் கேரளாவுக்கு கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.மேலும் இதுகுறித்து மாவட்ட கனிம வளம் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கிராவல் மண் திருட்டு மாஃபியா கும்பல் தங்குதடையின்றி தொடர் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட மண் திருட்டு மாஃபியா கும்பல்மீது வருவாய்த் துறையினர் மற்றும் கனிமவளத்துறை, காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்துத் திருட்டில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்தும் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கொள்ளை போகும் கனிம வளத்தைக் காப்பாற்ற மாவட்ட அரசு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *