மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்பிறகு பல்வேறு தரப்பினரும் கனிமொழி எம்.பி., தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் அருகே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சுமார் 4 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத்தலைவர் ராஜேஸ்குமார், தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் மீனவ பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.