புதிய தலைமைச் செயலக இடம் தேர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி கோரிக்கை.!

புதிய தலைமைச் செயலகத்திற்கான இடத்தை அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே பழைய வண்ணாரப் பேட்டையில் வடசென்னை மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, போக்குவரத்து நெரிசலாலும், குடியிருப்பு நெருக்கடியினாலும், சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியாகவே வட சென்னை இருந்து வருவதாகத் தெரிவித்தார். எனவே, வடசென்னை வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்குவதோடு, அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என்று கூறினார்.
தற்போது இருக்கக்கூடிய தலைமைச் செயலகம் கடுமையான இடநெருக்கடியிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்தார். ஆனால், அரசு அலுவலகங்கள் நீண்டகாலத்துக்கான கட்டுமானங்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
எனவே, இதுபோன்ற விவகாரத்தில் அவசரப்படாமல், புதிய தலைமைச் செயலகத்திற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதுவரை, பட்டினப்பாக்கத்தில் எந்தவிதமான பணிகளையும் அரசு தொடங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *