Actress Anjali Patil: நடிகைக்கு பார்சலில் போதைப்பொருள்!

Advertisements

அஞ்சலி பாட்டீல் நடிகையிடம் நூதன முறையில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 816 ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

மும்பை: தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்தவர் அஞ்சலி பாட்டீல் (வயது36). குதிரைவால் என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ள அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகைக்குக் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்தார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டிலிருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதைச் சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.

இந்தநிலையில் ஸ்கைப் மூலமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியெனக் கூறிக்கொண்டு பானர்ஜி என்ற பெயரில் ஒருவர் நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டார். அவர் நடிகையிடம் உங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து சரிபார்ப்பு பணி செய்ய ரூ.96 ஆயிரத்து 525-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றார். நடிகை அஞ்சலி பாட்டீலும் யோசிக்காமல் அவர் கேட்ட பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். பின்னர் அவர் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரிக்க மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291-ஐ செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்தப் பணத்தையும் நடிகை அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் அஞ்சலி பாட்டீல், சம்பவம்குறித்து தனது வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தார். அவர் இது மோசடியாக இருக்கலாமென நடிகையை உஷார்படுத்தி உள்ளார். இதையடுத்து நடிகை அஞ்சலி பாட்டீல், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் நூதன முறையில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 816 ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *