
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடுங்குளிர் காரணமாகக் குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாகப் பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாகப் பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாகக் குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருகிற 31ம் தேதிவரை பள்ளிகளில் காலைக் கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி குழந்தைகளுக்கு வருகிற 19ம் தேதிவரை தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் காலநிலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும், கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும், வெதுவெதுப்பான ஆடைகள் அணிய வேண்டும். இவைகள் நிமோனியா தொற்றிக் கொள்வதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும். இருமல், காய்ச்சல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகளுள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியோனியாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் நக்வி, மூத்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



