அரிட்டாப்பட்டி மக்களின் அழைப்பை ஏற்று புறப்பட்டார் முதலமைச்சர்!

Advertisements

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அப்போது, நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதி அளித்தார்.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாகப் பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கிராம மக்கள் பிரதிநிதிகள் 18 பேர், அமைச்சர் மூர்த்தியுடன் நேற்று சென்னைக்கு சென்றனர்.

அங்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து, பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும் அதற்கு அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டிக்கு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புறப்பட்டார்.

அரிட்டாப்பட்டி மக்களின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மதுரை புறப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *