
இதை மறைமுகமாக கட்டமைத்து வரும் பாஜகவின் Narrative-தான் இது என்கிறார்கள் விசயமறிந்த டெல்லி வாலாக்கள்.தவெக, திமுக ஆகிய இரண்டு எதிர் எதிர் துருவங்களையும் ஒரே தராசில் வைத்து, இரண்டுமே ஒன்றுதான் என்கிற ஒரு தோற்றத்தை உருவாக்கி, மறுபக்கத்தில் தன்னை மட்டுமே மாற்றுச் சக்தியாக Position செய்ய பாஜக மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய தேர்தல் முடிவுகளை நாம் சற்று ஆழமாக உற்று பார்த்தால், புதுசா தேர்தல் களம் கண்ட த.வெ.க தலைவர் விஜய், தலித் மக்கள், சிறுபான்மையின மக்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் வாக்குகளைப் பெருமளவில் பெற்றுள்ளார். அரசியல் தளத்தில் இந்த மூன்று வாக்கு வங்கிகளுமே பாரம்பரியமாக பாஜகவின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான, மதச்சார்பற்ற கொள்கை கொண்ட வாக்கு வங்கிகளாகும். அதாவது திமுகவின் பாரம்பரிய வாக்குகள்.
அப்படியிருக்க, இந்த வாக்குகள் எப்படி பாஜகவுக்குச் சாதகமானதாக மாறும்? இங்குதான் பாஜக தனது அடுத்தகட்ட மத அரசியல் வியூகத்தை வகுத்து வருகிறது.தவெக தலைவர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதும், அவரைச் சுற்றிலும் பல கிறிஸ்தவப் பிரமுகர்களை அவர் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும்தான் தற்போது கிளப்பப்படும் புதிய விவாதப் பொருளாக உள்ளது.
இதையே ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் இருக்கும் ‘இந்து மெஜாரிட்டி’ வாக்குகளைத் தங்களுக்கு ஆதரவாக கன்சாலிடேட் செய்ய பாஜக திட்டமிடுகிறது. அதாவது தவெக – திமுக இந்த இரண்டு கட்சிகளுமே ஒன்று என கூறி திமுகவை பலமிழக்க செய்து, திமுகவை அரசியலில் இருந்து காலி செய்வது.
இன்னொரு பக்கம் பாஜகவை எதிர் பக்கத்தில் நிறுத்தி அதிமுகவை வலிமை இழக்க செய்து, பாஜகவை எதிர் கட்சியைப் போல மாற்றுவது. அதற்கான ஓர் அரசியல் உள்ளடக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ” தவெக + திமுக வெர்சஸ் பாஜக” என்ற ஒரு இருமுனைப் போட்டிப் பிரசாரத்தை பாஜகவினர் முன்னெடுத்து வருகிறார்கள் என்ற விளக்கம் தரப்படுகிறது.
இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த, கே. அண்ணாமலை போன்ற தடால் புடால் தலைவர்களை மீண்டும் தமிழக பாஜகவின் முன்னிலை முகமாகக் கொண்டு வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சரிவைச் சந்தித்து, அவரது தலைமை வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அக்கட்சியின் பின்னணியில் இருக்கும் வலுவான ‘ கொங்கு வேளாளர் கவுண்டர் லாபி’ இந்த புதிய அரசியல் மாற்றத்தை ஆதரிக்கத் தொடங்கும் என்று கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
திமுக தோல்வியில் துவண்டு கிடக்கு. மறுபுறம் அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அந்த இடத்தை நோக்கி நகர துடிக்கும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் களம் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது.
இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்திருந்தனர் என்கின்றனர். தவெக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துவதன் மூலம், “இந்துக்களுக்கு எதிரான கூட்டணி ஒருபுறம், அவர்களுக்கு ஆதரவான பாஜக மறுபுறம்” என்கிற பிம்பத்தை உருவாக்க பாஜகவினர் துடிக்கிறார்கள்.
மொத்தத்தில், தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சாதகமான சூழல், திராவிட மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான சித்தாந்தத் தரப்பாக மாறுவதற்கு பாஜக தன் முழு பலத்தையும் பிரயோகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ‘மைக்ரோ பாலிட்டிக்ஸை தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்.


