காவலர் கன்னத்தில் அறைந்த இளைஞர் – தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகை அகற்றப்பட்டதைக் கண்டித்து அக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, மறியலை தாண்டி பைக்கில் செல்ல முயன்ற ஒரு இளைஞருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காவலர் அந்த இளைஞரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
உடனே சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞரும் பதிலுக்குக் காவலரின் கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூடுதல் போலீசார், உடனடியாக அந்த இளைஞரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பதாகை அகற்றிய விவகாரத்தில் தொடங்கிய போராட்டம், காவலருக்கும் இளைஞருக்கும் இடையே மோதலாக மாறிய நிகழ்வு தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *