Easter Festival 2024: சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்பு!

Advertisements

புனித வெள்ளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இன்று நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகின்றது.

தங்கள் பாவங்களை நீக்குவதற்காக ஏசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்துகொண்டு உயிர்நீத்ததாகக் கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். ஏசு உயிர் நீத்ததாகக் கூறப்படும் இந்த வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தாங்கள் செய்த பாவங்களுக்காகச் சிலுவையை சுமந்த ஏசு பட்ட பாடுகளை காண சகிக்க முடியாததால் இனி பாவங்களே செய்யப்போவதில்லையென இந்தப் புனித வெள்ளியில் உறுதியேற்றுக்கொள்வதாகவும் இந்தப் புனித வெள்ளி அனுசரிக்கபடுகின்றது.

இதையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்ஸ்சிஸ் காலிஸ்ட் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்திலிருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்லப் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். சிலுவைப்பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் புகழ் பாடலைப் பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர். இதே போல் புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *